டெல்லி:பிரான்சில் இருந்து ஏற்கனவே 14 ரஃபேல் பேர் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 4 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.
இந்திய ராணுவத்துக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு, பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்களில், 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன. 2-வது கட்டமாக 3 போர் விமானங்களும், 3-வது கட்டமாக 3 போர் விமானங்களும் 4-வது கட்டமாக மார்ச் 30ந்தேதி 3 ரஃபேல் போர் விமானங்களும் வந்தடைந்தன.
இந்த நிலையில் தற்போது 5-வது கட்டமாக மேலும் 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இந்த விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில், ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்சில் இருந்து இந்திய விமானப்படை தளபதி பதாரியா, ரஃபேல் விமானங்களை கொடியசைத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பிரான்சில் இருந்து இடை நில்லாமல் இந்தியாவுக்கு பயணித்த இந்த விமானங்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை விமானங்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. தொடர்ந்து இடை நில்லாமல் பறந்து இந்தியா வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து, மேலும் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்த மாதமே இந்தியா வர இருப்பபதாகவும், அவைகள் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமரா விமானப் படைத்தளத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.