கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.
சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதியதை அடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதில் மோதிய வேகத்தில் மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து மின்னணு கதவுகள் திறக்கமுடியாமல் செயலிழந்தன.
இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கேதாபா கோஹில், 29, அவரது சகோதரர் நீல்ராஜ், 25, ஜெய் சிசோடியா மற்றும் திக்விஜய் படேல் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த போது அவ்வழியாக சென்ற நபர் கூரான இரும்பு கம்பியின் உதவியால் கார் கண்ணாடியை உடைத்ததை அடுத்து அந்த பெண் அவ்வழியாக வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் Tesla Model Y காரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை அடுத்து டெஸ்லா கார்களில் உள்ள எலக்ட்ரானிக் கதவு குறித்து விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
கனடாவில் டெஸ்லா கார்களில் ஏற்கனவே இதேபோல் தீ விபத்து ஏற்பட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 பேர் பலியான சம்பவம் டெஸ்லா வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.