அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி இன்று கரையை கடந்தது.
5 நிலைகளாக பிரிக்கப்பட்ட சூறாவளி குறித்த எச்சரிக்கையில் மில்டன் சூறாவளி 220 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் 5வது நிலையான அதிதீவிர சூறாவளியாக கடலை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.
மில்டன் சூறாவளி காரணமாக 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
நேற்றிரவு கரையை கடந்த இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும் இது 3ம் நிலை சூறாவளியாக கரையைக் கடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூறாவளியுடன் பலத்த மழையும் பெய்ததை அடுத்து பல இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
32 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மில்டன் சூறாவளி கரையை கடந்த போதும் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை என்று கூறியுள்ள மாகாண நிர்வாகம் நிலைமை சீரடையும் வரை மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று இன்று காலை அறிவித்துள்ளது.
இந்த சூறாவளி காரணமாக தம்பா மற்றும் ஒர்லாண்டோ ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை இந்த சூறாவளிக்கு 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.