சென்னை: நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்து உள்ளார். இந்த முகாமில்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவ. 9-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்த 2023 ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதையொட்டி, வரும் நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் (நவம்வர்)  12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது; காலை 9.30 மணி – மாலை 5.30 மணி வரை அந்த அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைளை முன்னெடுக்க  மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதி உள்ளார்.

2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியைக் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம்.

அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் வரும் 1-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி முடிய அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். மேலும், வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை), 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 26-ம் தேதி (சனிக்கிழமை), 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, படிவம் 6-ன் மூலமாகவும், பதிவினை நீக்கம் செய்ய படிவம் 7-ன் மூலமாகவும், முன்னரே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8-ன் மூலமாகவும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-ன் மூலமாகவும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து வேறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உண்டான பகுதியில் குடி பெயர்ந்து சென்றவர்கள், புதிய பகுதியில் பெயர் சேர்க்கவும், படிவம் 6-ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது voters helpline app என்ற ஆன்ட்ராய்ட் செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். பொது சேவை மையங்களிலும் இணைய வழியில் பதிவு செய்யலாம். இதைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.