வெலிங்டன்: 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
200க்கும் மேலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் மொத்தமாக 2,02,54,685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
7,38,930 பேர் உயிரிழக்க, 1,31,18,618 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மற்ற நாடுகள் ஆச்சரியப்படும் வகையில் நியூசிலாந்து நாட்டில், 100 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பும் நியூசிலாந்தை வெகுவாக பாராட்டியது. மெல்ல, மெல்ல அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பியது. இந் நிலையில் புதியதாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
4 பேருக்கும் கொரோனா எப்படி பரவியது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது: நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறோம் என்றார்.