கார்டூம், சூடான்

சூடான் நாட்டின் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சூடான் நாட்டின் அதிபராக ஒமர் அல் பஷீர் பதவி வகித்து வந்தார்   அவரது ஆட்சியை எதிர்த்துச் சென்ற வருடம் கடும் போராட்டங்கள் நிகழ்ந்தன.  அதன் பிறகு இந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.  ஒமர் மீது போர்க் குற்றங்கள் செய்ததாக வழக்குப் பதியப்பட்டது.  கடந்த வருடம் அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவாத் இபன் அவுப் என்பவர் ஒமரின் ஆட்சியைக் கவிழ்த்து புதிய அரசு அமைத்தார்

ஒமர் வீட்டில் நடந்த சோதனையில் அவர் ஏராளமான சூடான மற்றும்  வெளிநாடு பணத்தைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.   தனது அதிபர் பதவியைப் பயன்படுத்திப் பல ஊழல் குற்றங்கள் செய்து இந்த பணத்தைச் சம்பாதித்ததாக வழக்கு  தொடரப்பட்டு அவரது ஜாமீன் மனு நிராகரிப்பட்டது.  கடந்த டிசம்பர் மாதம் அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்ட்டுளார்.

இந்நிலையில் அவருடைய, மற்றும் அவரது குடும்பத்தினர், கூட்டாளிகள் பெயரில் அவர் வாங்கியுள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   இது குறித்து சூடான நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சலா மனா பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 400 கோடி டாலருக்கு மேல் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.  இந்த சொத்துக்களை மதிப்பிடும் பணி நடப்பதாகவும் விரைவில் சரியான மதிப்பு தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.