சென்னை:

மிழகத்தில் 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலினும் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து கட்சித்தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை இன்றுமுதல் தொடங்குகின்றனர்.

அதிமுக – எடப்பாடி பழனிச்சாமி:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சூலூர் தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதனையடுத்து, மே 5-ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், மே 6-ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மே 7-ம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதேபோல், வரும் 11-ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மே 12-ம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதனையடுத்து, மே 13-ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 14-ம் தேதி மீண்டும் சூலூர் தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் (மே 1 மற்றும் 2ந்தேதிகள்) ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.  தொடர்ந்து, மே 3,4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதையடுத்து,  மே 5,6 சூலூர் தொகுதியிலும், மே 7,8 அரவக்குறிச்சி தொகுதியிலும் முதல்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இரண்டாம் கட்டமாக மே 14-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், மே 15-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.