டொமினிக்கன் குடியரசு நாட்டின் புன்டா கேனா
நியூயார்க்:
4 மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று நம்பி விமானத்தில் ஏறிய பயணிகள் 30 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
டொமினிக்கன் குடியரசு நாட்டின் புன்டா கேனாவில் இருந்து நியூயார்க் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமானநிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கள் கிழமை மதியம் புறப்பட்டது.
இதன் பயண நேரம் வழக்கமாக 4 மணி நேரம் மட்டுமே. ஆனால், அன்றைய தினம் விமானத்தில் ஏறி உட்கார்ந்த பயணிகளுக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் நியூயார்க்கில் இந்த விமானத்தால் தரையிறங்க முடியவில்லை. இதனால் மான்செஸ்டர் நியூ ஷாம்சயர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
அங்கு அந்த விமானம் தரையிறங்கியதும், விமான சிப்பந்திகளுக்கான ஓய்வு நேரம் நெருங்கிவிட்டது. இதனால் அன்று இரவு முழுவதும் விமானம அங்கே நின்றது.
மீண்டும் மறுநாள் காலை பயண நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டு அந்த விமானம் புறப்பட்டது. நியூயார்க்கில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் மீண்டும் அந்த விமானம் போஸ்டான் விமானநிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.
இப்படியாக இரு முறை அந்த விமானம் திருப்பிவிடப்பட்டது. இறுதியாக செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு தான் இந்த விமானம் நியூயார்க்கில் தரை இறங்கியது.
4 மணி நேரத்தில் நியூயார்க் வரவேண்டிய பயணிகள் 30 மணி நேரம் வரை அலைகழிக்கப்பட்டு பின்னர் வந்து சேர்ந்தனர். இந்த நிகழ்வுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் வருத்தம் தெரிவித்துள்ளது.