சென்னை,
சசிகலா, தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகள், நிறுவனங்கள், பண்ணைகளில் நடைபெற்று வரும் ரெய்டு இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது.
போலி கம்பெனிகள் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து வருமான வரித்துறையினர் சசிகலாவின் உறவினர்கள் என அழைக்கப்படும் மன்னார் குடி மாபியா அனைவரின் வீடுகள், நிறுவனங்கள், பண்ணைகள், கல்லூரிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள், கார் டிரைவர்கள், உதவியாளர்கள் உள்பட அனைவரது விடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
சுமார் 1800 அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ரெய்டு இன்று 3வது நாளாகவும் பல இடங்களில் தொடர்ந்து வருகிறது.
இதே போன்று கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர் தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்குசந்தையில் முதலீடு செய்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலுள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி, கோடநாடு அருகிலுள்ள கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் வீட்டில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே இதுவரை நடைபெற்ற ரெய்டுகளில் இதுவே மிகப்பெரிய ரெய்டு என்றும், நாங்கள் மன்னார் குடி மாபியாதான் என்று சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் ஏற்கனவே ஒத்துக்கொண்டுள்ள நிலையில், தற்போது மன்னார்குடி மாபியா கும்பல்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.