நாமக்கல்:
நாமக்கல்லில் உள்ள சசிகலா ஆதரவு வழக்குரைஞர் மற்றும் அவர்களது ஆஸ்தான ஜோதிடர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என அறியப்பட்ட சசிகலா, ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாகவும், அவர்களது குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் ஏற்கனவே புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
ஆனால், ஜெ. இருந்தவரை இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது, ஜெ. இல்லாத நிலையிலும், சசிகலா சிறையில் இருக்கும் வேளையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா, டிடிவி குடும்பத்தினருக்கு ஜோதிடம் கணிக்கும் ஆஸ்தான ஜோதிடர் வீட்டிலும் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளையில், சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் குழுவில் உள்ள முக்கிய வழக்கறிஞரான, நாமக்கல்லை சேர்ந்த செந்தில், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் எ.வி.பாலுசாமி உள்ளிட்ட 5 பேர் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்று வந்தது. இன்று 3வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையொட்டி 5 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
சோதனையை தொடர்ந்து வழக்கறிஞர்களின் உறவினர்களை வங்கிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து நகைகள் மற்றும் ஆவணங்களை வீட்டிற்கு எடுத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கம், சொத்துக்குள் வாங்கி குவித்தது, பங்குசந்தையில் முதலீடு செய்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அம்பலத்தாடையார் வீதியில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3வது நாளாக இன்றும் சனிக்கிழமை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.
இந்நிலையில், நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலின் தனியறைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
வருமான வரி சோதனையை தொடர்ந்து வழக்கறிஞர் செந்தில் தலைமறைவாக இருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் அறை பூட்டு போடப்பட்டு இருப்பதால் அதிகாரிகளால் சோதனை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.