சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ.307 கோடி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக தமிழ்நாட்டில் 2021 – 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
மனுவில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியது.
மேலும், முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனு குறித்து பொதுத்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.