திருமலை:
திருப்பதி நகராட்சிக்கு ரூ.39 கோடி வரி பாக்கி செலுத்த திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
திருமலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ என சத்திரங்கள் உள்ளன. இதற்கான சொத்து வரி ஆண்டு தோறும் திருப்பதி நகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தான் இந்த சத்திரங்களுக்கான சொத்து வரியை செலுத்தவில்லை.
இதன்காரணமாக திருப்பதி நகராட்சி 12 ஆண்டுகளுக்கான சொத்து வரி வட்டியுடன் சேர்த்து 39 கோடி ரூபாய் நகராட்சிக்கு செலுத்த நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
ஆனால், இதற்கு தேவஸ்தான் மறுப்பு தெரிவித்து உள்ளது. திருப்பதி ‘தேவஸ்தானம், பக்தர்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்பதால் சொத்து வரி செலுத்த தேவையில்லை’ கோவிந்தா… கோவிந்தா என, தேவஸ்தான அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆனால், நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், ‘தேவஸ்தானம், சேவை நிறுவனமாக இருந்தாலும், பக்தர்களிடம் வாடகை வசூலிக்கிறது. எனவே, நகராட்சிக்கான வரி பாக்கியை உடன் செலுத்த வேண்டும்’ என, உத்தரவிட்டது.
இந்த விபரம் அறிந்த, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதி நகராட்சிக்கான வரியை செலுத்தும்படி, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனாலும், தேவஸ்தானம் வரி செலுத்த மறுத்து வருகிறது. இதனால், திருப்பதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.