வாரணாசி

பிரதம்ர் மோடியை எதிர்த்து போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட முன்வந்த நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா உள்பட 36 பேரின் வேட்புமனுக்களை நிராகரித்துள்ளது. இது  மற்ற வேட்பாளர்கள் இடையே கடும் அதிருப்திய் உருவாக்கி உள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரும் வாரணாசியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவருமான ஷியாம் ரங்கீலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

 “வாரணாசி தொகுதியில் போட்டியிடும் 55 வேட்பாளர்களில், 36 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உட்பட 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

எனது ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவும் தடை ஏற்படுத்தப்பட்டது. மேலூம் மாவட்ட நீதிபதி அலுவலகம் வேட்புமனு தாக்கல் செய்யும்போது எனக்கு உதவி செய்ய மறுத்துவிட்டது.

இன்று, மாவட்ட ஆட்சியர் என்னிடம் எனது ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், நான் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்று கூறினார்.

என்னுடன் வழக்கறிஞர்களை உள்ளே அழைத்துச் செல்ல அனுமதிக்காமல் என்னை தனியாக வரச்சொன்னார்கள். அப்போது என் நண்பர் தாக்கப்பட்டார்.

பிரதமர் மோடி வேண்டுமானால் அழுது நாடகமாடலாம். நான் இங்கு அழ விரும்பவில்லை.

நேற்று மட்டும் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்று 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பார்த்து சிரிப்பதா அழுவதா”

என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து வாரணாசி மாவட்ட நீதிபதி அளித்த பதிலில், பிரமாணப் பத்திரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு இணங்கத் தவறியது ஆகிய காரணங்களுக்காகவே ரங்கீலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.