சென்னை: தமிழகத்திலுள்ள அரசு தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் 3,500 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; தமிழக பள்ளிக்கல்வி துறையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள், எல்கேஜி, மழலையர் வகுப்புகள் துவக்கம், ஸ்மார்ட் வகுப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வரிசையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாதம் ரூ.7,500 ஊதியத்தில் 3,500 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களின் தேவைக்கேற்ப, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், புதிய ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் பணி என்றாலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.