சென்னை: தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 33,245 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் சாலை விபத்துக்களை குறைக்க 5 அம்ச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவல் காலை 10மணிக்கு வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போ துஉறுப்பினர்களினகேள்விக்கு பதில் கூறிய ஸ்டாலின், சாலை பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் வழங்கி வருவதாக குறிப்பிட்டவர், சாலை விபத்துக்களை குறைக்க 5 அம்ச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சாலை விபத்தில் ஒருவர்கூட உயிர் இழக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இன்னுயிர் காப்போம் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று கூறியவர், இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 33,25 பேர் உயிர் பிழைத்து இருப்பதாகவும், அதற்காக ரூ.29.5 கோடி கட்டணமாக செலவிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான உரிய வழிகாட்டுதல்கள் தொடர்பான வினாவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் பின்வருமாறு:-
“இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் -48”
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே நான் பலமுறை இந்த சாலை விபத்துக்களைப் பற்றி, அதனுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிக் கவலையுற்று உரையாற்றியிருக்கிறேன். ஆகவே அதை மனதிலே வைத்து நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் “சாலைகளில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்” என்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக நாங்கள் கொண்டிருக்கிறோம். அதற்காக என்னுடைய தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் ஒன்றினை கடந்த 18-11-2021 அன்று கூட்டி ஆலோசித்து, “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் -48” என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.
“சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை: சாலைப் பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம்-உதவி செய்”என்ற ஐந்து அம்சத் திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காப்பற்றப்பட்டவர்கள் விபரம்:
18-12-2021 முதல் 18-3-2022 வரை அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 142 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும், ஆக மொத்தம் 33 ஆயிரத்து 247 பேர் இந்த “48 மணி நேர இலவச” சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சிகிச்சை பெற்றார்கள் என்பதைவிட 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்திற்காக இதுவரை 29.56 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்பதையும், இத்திட்டம் மேலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பையும் சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு, அரசு இனி வரும் காலங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படும். சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours – க்குள் மருத்துவ மனைக்குக் கொண்டுவந்து அனுமதித்து உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிகம் வழங்கப்படுகிறது.”
இவ்வாறு கூறினார்.