புனே: எதிர்கால தலைமுறையினரின் தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக, இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க நிழற்படச் சுருள்கள் சேதமடைந்துவிட்டன அல்லது தொலைந்துவிட்டன என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அந்த நிழற்படச் சுருள்களின் எண்ணிக்கை 31,000 க்கும் மேல். மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புனேவில் அமைந்துள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில், மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் சார்பில் ஒரு சோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த காப்பகத்தால் பாதுகாக்கப்படும் பதிவேடுகள் பற்றி கணக்கெடுப்பதுதான் இந்த சோதனையின் நோக்கம்.
அந்தச் சோதனையின்போதுதான், 31,000 க்கும் மேற்பட்ட நிழற்படச் சுருள்கள் சேதமடைந்துவிட்டன அல்லது காணாமல் போய்விட்டன என்ற அதிர்ச்சியான உண்மை வெளிவந்துள்து.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், கடந்த 1964ம் ஆண்டு, ஒரு சுயேட்சையான மீடியா பிரிவாக உருவாக்கப்பட்டது. மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இந்தக் காப்பகம் செயல்படுகிறது.
– மதுரை மாயாண்டி