அகமதாபாத்தில் 30,000 க்கும் மேற்பட்ட ஆபரண தயாரிப்பாளர்களும், ராஜ்கோட்டில் 60,000 பேரும் தொழில்துறையின் மந்தநிலை காரணமாக வேலையில்லாமல் இருந்ததால் நகரங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்னும் பலர் முடி வெட்டுதல் மற்றும் காய்கறி விற்பனையை மேற்கொண்டுள்ளனர்.

 

உயர்ந்து வரும் தங்கத்தின் விலை மற்றும் ஆபரணத்தின் தேவைக்கான 32% குறைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான தங்க கைவினைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு, தங்கத்திற்கான தேவை கிராமப்புறங்களிலிருந்து தான் வருகிறது. இருப்பினும், அதிக மழை மற்றும் சேதமடைந்த பயிர்கள் காரணமாக கிராமப்புறங்களில் இந்த ஆண்டு தங்கத்திற்கான தேவை கூடுதலாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பளபளக்கும் அத்தனையும் தங்கம் அல்ல. 37 வயதுடைய மதன் சைனி மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த துறையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பல பொள்கொல்லர்களை விட, இந்த உண்மையை வேறு யாரும் நன்கு அறிந்திருக்கமாட்டார்கள்.

20 ஆண்டுகால வியாபாரத்திற்கு பின் தனது பொற்கொல்லர் பணியை விட்டுவிட்டு, முடி வெட்டுதல் பணிக்கு மாறும் நிலைக்கு சைனி தள்ளப்பட்டுள்ளார். சைனியை போல பல பொற்கொல்லர்களும், தங்க கைவினைஞர்களும் அகமதாபாத் நகரத்தில் இருந்து கடந்த 6 மாத காலமாக வேலைவாய்ப்பு ஏதும் இல்லாமல் தற்போது வெளியேற தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சைனி, “கடந்த 4 மாதங்களாகவே நாங்கள் கடினமான காலத்தை தான் கடந்து வந்திருக்கிறோம். முன்பு நான் மாதம் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பாதிப்பேன். ஆனால் தற்போது என் நண்பரின் சலூனில் பணி செய்து மாதம் ரூ. 6,000 மட்டுமே சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தலைக்கு மசாஜ் மற்றும் ஷேவிங் செய்வேன். முடி வெட்ட கற்றுக்கொண்டு இருக்கிறேன். என் நண்பன் உதவிடாவிட்டால் நான் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பேன்.

இருபது ஆண்டுகளாக நான் நடத்தி வந்த நகைக்கடை இழத்து மூடும் அளவுக்கு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தான் நண்பரின் சலூனில், பொற்கொல்லர் பணியை விட்டுவிட்டு இப்போது முடி வெட்டுபவராக பணியாற்றுகிறேன். இப்போது நான் ஒரு பார்பர். எனது பணி முன்பு காலை 9 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை நீடிக்கும். அந்த பணி எனக்கு மன நிம்மதியை கொடுத்தது. பிடித்த தொழிலை, தெரிந்த தொழிலை செய்தேன். ஒரு நாளைக்கு ரூ. 3,000 வரை சம்பாதித்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டது. ஒரு நபருக்கு தலா ரூ. 400 முதல் 500 வரை பெற முடிகிறது. வரும் நபர்களுக்கு ஏற்றவாறு நான் எனது பணியை சலூனில் செய்து வருகிறேன். இப்போது காலை 10 மணிக்கு என்னுடைய வேலை தொடங்கினாலும், இரவு 8 மணிக்கே முடிவுக்கு வந்துவிடுகிறது.

தங்க வியாபாரம் முற்றிலுமாக மோசமான நிலைக்கு வந்துவிட்டது. தங்க விபாயாரம் செய்தவர்கள் கடந்த ஓராண்டுகளாகவே அதீத சரிவை சந்தித்து வந்துள்ளனர். இப்போது வேறு தொழிலை செய்யவேண்டும் அல்லது நஷ்டத்தில் தனது வியாபாரத்தை தொடரவேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இதுபோன்ற நிலை இன்னும் 3 மாதம் தொடர்ந்தால், வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகமதாபாத் நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான ரோஹித் சோக்சி, “அகமதாபாத்தில் 30,000 க்கும் மேற்பட்ட ஆபரண தயாரிப்பாளர்களும், ராஜ்கோட்டில் 60,000 பேரும் தொழில்துறையின் மந்தநிலை காரணமாக வேலையில்லாமல் இருந்ததால் நகரங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நடுத்தர மற்றும் ஏழை குடும்ப பணியாளர்கள் உடனடியாக எந்த தொழிலையும் பெறுவதில்லை. முதலில் இதனால் பாதிக்கப்பட்டது கைவினைஞர்கள் தான். இதில் பலர் மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகத்தை சேர்ந்தவர்கள். தங்கத்தின் விலை உயர்ந்தபோதும், பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிப்பை சந்தித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.