லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான Pager ஒரே நேரத்தில் வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
லெபனானுக்கான ஈரான் தூதர் உள்ளிட்ட சுமார் 3000 பேர் இதில் காயமுற்றனர்.
இந்த சம்பவத்தில் சேதமடைந்த பேஜர்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த Pager ஒவ்வொன்றிலும் 3 கிராம் எடை கொண்ட வெடி பொருள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ஒரு பேஜர் தயாரிப்பு தொழிற்சாலையிடம் 5000 பேஜர்களை இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு வாங்கியதாகவும் அது தயாரிக்கப்பட்ட இடத்திலேயே வெடி பொருளுடன் கூடிய சிப் போர்டுகளை பொருத்தியதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் உடனான சண்டையை அடுத்து இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியாத வகையில் அடிப்படை தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பரிமாற்ற கருவியை பயன்படுத்த ஹிஸ்புல்லா அமைப்பு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், உலகில் யாரும் தற்போது அதிகளவு பயன்படுத்தாத பேஜர் தொழில்நுட்ப கருவியை ஒரே தொழிற்சாலையில் இருந்து இத்தனை எண்ணிக்கை ஆர்டர் செய்யப்பட்டிருப்பது அறிந்த இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் அந்த பேஜர்கள் தயாரிக்கப்பட்ட இடத்திலேயே குறிப்பிட்ட குறியீட்டை உள்ளீடு செய்தால் வெடிக்கும் வகையில் சிப் போர்ட் பொருத்தி அதை ஹிஸ்புல்லா அமைப்புக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.
இந்த கருவிகளை எந்த வித சந்தேகமும் இல்லாமல் கடந்த பல மாதங்களாக அந்த அமைப்பினர் பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று இவை அனைத்தும் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து வெடித்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தைவான் நாட்டைச் சேர்ந்து கோல்ட் அப்பல்லோ என்ற நிறுவனத்தின் அனுமதியுடன் ஐரோப்பாவில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பேஜர்கள் எப்படி வெடித்தது என்பது குறித்து கோல்ட் அப்பல்லோ நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9 பேரை பலி வாங்கியதுடன் 3000க்கும் அதிகமானோர் காயமடைந்த இந்த சம்பவத்திற்காக இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்று ஹிஸ்புல்லா எச்சரித்துள்ளது.