ரியுபோல்

க்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் மக்கள் பாதுகாப்புக்கு ஒதுங்கி இருந்த நாடக அரங்கில் ரஷ்யா குண்டு வீசியதில் 300 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் நடத்த்தி வருகிறது.  ரஷ்யா கடந்த சில நாட்களாகத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.  குறிப்பாக உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று வரும் ரஷ்யா, அங்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

தினமும் ரஷ்யப் படைகள் 50 முதல் 100 குண்டுகளை / மரியுபோல் நகரின் மீது வீசுவதாகவும்,  இதனால் நகரின் 80 சவீத கட்டிடங்கள் மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதமாகியுள்ளதாக நகரசபைத் தெரிவித்துள்ளது.  இந்நகரினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யப் படைகள் நடத்தும் தீவிர தாக்குதலினால் சுமார் 3,00,000 மக்கள் வெளியேற முடியாமல் நகரத்திற்குள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் மரியுபோல் நகரத்தில் உள்ள நாடக அரங்கம் ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசித் தாக்கியது.  ரஷ்யா தாக்கியபோது, அந்த அரங்கத்தினுள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பேர் பதுங்கி இருந்தனர் என்று உக்ரைனின் அதிகாரிகள் சர்வதேச செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.  இந்தத் தாக்குதலில் குறைந்தது 300 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.