காடுனா: நைஜீரியாவில் 30 பள்ளி மாணவா்களை சமூக விரோத கும்பல் ஒன்று கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டின் காடுனா மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அபாகா நகரிலுள்ள பள்ளிக்கு வந்த ஆயுதக் கும்பல், அங்கிருந்த 30 மாணவா்களை கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட மாணவா்களில் ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் அடங்குவா்.
நைஜீரியாவில் பள்ளி மாணவா்கள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா் கதையாகின்றன. 2014ம் ஆண்டு போகோ ஹராம் தீவிரவாதிகளால் 276 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவா்களில் இன்னமும் பலர் கண்டறியப்படவில்லை.
பின்னர் ஜம்பாரா என்ற மாகாண அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து கடந்த மாதம் 279 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டனர். பிறகு அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.