அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது.

வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரு நிமிடம் நிறுத்தி எந்த ஒரு சேதமும் இல்லாமல் கைது செய்ததாக அமெரிக்கா பறைசாற்றியது.

இம்முறை இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி இருந்த இடத்தை துல்லியமாக கணித்து குண்டுவீசி படுகொலை செய்தது.

பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்ற காமேனி படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் அந்நாட்டு ராணுவத்திற்கு கிடைத்துவரும் பொருளாதார மற்றும் பெட்ரோலிய வளங்களின் விநியோக சங்கிலியை குறிவைத்து ஈரான் தாக்கத் தொடங்கியது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த தாக்குதலில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் பெரும்பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன.

இதனால், இங்குள்ள பெருமுதலாளிகள் அமெரிக்காவின் அதிகாரப் போக்கை கண்டித்து வெளிப்படையாகவே கேள்வியுழுப்பியுள்ள நிலையில் அந்நாட்டு மன்னர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஆராம்கோ எண்ணெய் நிறுவனம் மீதான தாக்குதல் மற்றும் வளைகுடாவில் உள்ள எண்ணெய் வளங்கள் மீதான தொடர் டிரோன் தாக்குதல் காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நிலை குலைந்துள்ள அமெரிக்க ராணுவம் செய்வதறியாது திகைத்து வருகிறது.

அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கப்பல்கள் மற்றும் அது தொடர்புடைய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்துள்ளதோடு அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரானின் இந்த எச்சரிக்கைக்கு சவால் விடுத்துள்ள அமெரிக்கா தங்கள் நாட்டு கப்பலுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறிய அடுத்த நொடியே ஈரானின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் இருந்து கண்ணுக்கு எட்டாத தூரம் சென்று தங்கள் போர் கப்பல்களை நங்கூரமிட்டுள்ளது.

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் மட்டும் வழக்கம் போல் சென்று ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வருகின்றன.

இந்த நிலையில், உலக நாடுகள் மத்தியில் தனது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தும் திட்டத்தில் உள்ள அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்க இந்திய அரசுக்கு 30 நாட்கள் விலக்கு அளித்துள்ளது.

ஏற்கனவே, “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்; இல்லையெனில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்” என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதல் தனது கணிப்புப்படி இல்லாததால் இந்தியா உடன் மீண்டும் கைகோர்ப்பது என்று டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இதன் முதல் படியாக ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்க இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த கரிசனத்தால் இந்தியாவில் சிலிண்டர் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்றும் தட்டுப்பாடு இருக்காது என்றும் இந்திய மக்கள் நம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் தற்போது சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதால் அமெரிக்கா சொல்வதை கேட்பதால் வரியில் இருந்து தப்பிக்கவும் உள்நாட்டு தட்டுப்பாட்டை போக்கவும் என இந்தியாவுக்கு இரட்டை லாபம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்த அனுசரணையான நடவடிக்கையை மையமாக வைத்து தற்போது மத்திய கிழக்கில் தரைமட்டமான தனது ராணுவ தளங்களை இந்தியாவுக்கு மாற்றவும் அங்கிருந்து இந்த பிராந்தியத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே அமெரிக்காவின் பிடியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வசமாக சிக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ரஷ்ய பெட்ரோல் விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த அனுமதி எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்துள்ளது.

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 9ம் தேதி  துவங்குவதை அடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

[youtube-feed feed=1]