பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைக்கும் இந்திய போர் விமாப்படையின் விமானி அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முப்படை தளபதிகளை சந்தித்து பேசினார்.

abinandar

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன் தினம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகளின் சுவர்க்கம் என அழைக்கப்படும் பால்கோட் பகுதியில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படை தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்திய எல்லைக்கும் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எஃப்16 ரக விமானத்தையும் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தியது. இதற்கெல்லாம் பதிலடியாக இந்தியாவின் மிக் 21 என்ற போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இந்த விமானத்தில் விமானியாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனை பாகிஸ்தான் சிறைப் பிடித்து வைத்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக விடுக்க வேண்டுமென அந்நாட்டு துணை தூதரைநேரில் அழைத்து இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி இந்திய விமானி பற்றிய தகவல்களை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட விமானியை துன்புறுத்தக் கூடாது, அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இந்தியா கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க ராஜாங்க ரீதியாக சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தனை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முப்படை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இருநாடுகளும் போர் பதற்ற சூழலை தடுக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஜப்பபான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோரா கோனா கேட்டுக் கொண்டுள்ளார்.