புதுடெல்லி:

பங்களாதேஷிலிருந்து அடிக்கடி விமானத்தில் பறந்து வந்து இந்தியாவின் பல பகுதிகளில் கொள்ளையடித்த 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராம் கோபால் நாயக் இது பற்றி கூறியதாவது;

பங்களாதேசை சேர்ந்த கம்ரூல் கமால், சகிதுல் இஸ்லாம் மற்றும் நஜருல் ஆகிய 3 பேரும் பங்களாதேஷில் இருந்து விமானத்தில் பறந்து வந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொள்ளையடித்து வந்துள்ளனர்.

கமால் ஏற்கனவே 2003 முதல் 2010 வரை டெல்லி சிறையிலும், 2011 முதல் 2017 வரை முசாபர் நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். நஜ்ருல் 21 முறை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் பங்களாதேஷைச் சேர்ந்த 6 முதல் 8 எட்டு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்தக் கும்பல் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று வீட்டு உரிமையாளர்களை கட்டிவைத்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இந்தக் கும்பலுக்கு தலைவனாக கருதப்படும் கம்ரூல் கமால் பற்றி எங்களுக்கு தகவல் வந்தது. அவன் டெல்லியில் உள்ள சாரை காலே கான் என்பவர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, விரைந்து சென்று கம்ருல் கமால், இஸ்லாம்,நஜ்ருல் ஆகியோரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கமாலும் இஸ்லாமும் பாஸ்போர்ட்டுடன் விசா எடுத்து இந்தியா வந்ததும், நஜ்ருல் சட்டவிரோதமாக எல்லை கடந்து வந்ததும் தெரிய வந்தது.

2017-ம் ஆண்டிலிருந்து 8 முறை கமால் இந்தியா வந்துள்ளது பாஸ்போர்ட் மூலம் தெரியவந்தது.

பங்களாதேஷ் புரோக்கருக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக நஜ்ருல் தெரிவித்தார்.

இந்த கும்பல் டெல்லியில் உள்ள போஸ் காலனி வீடுகளில் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. யாராவது தடுத்தால் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டார்கள்.

இவர்கள் பெரும்பாலும் ரயில் நிலையங்கள் அருகிலும், வனப் பகுதிகளிலும் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொள்ளை அடித்தபின் கமலும் இஸ்லாமும் விமானத்தில் பங்களாதேஷ் சென்றுவிடுவார்கள்.
நஜ்ருல் கொள்ளையடித்த பொருட்களுடன் மறுபடியும் சட்டவிரோதமாக எல்லையை கடந்து செல்வான்.

அங்கு சென்றதும் 3 பேரும் கொள்ளையடித்த பொருட்களை பங்கு போட்டுக் கொள்வார்கள் என்றார்,