பாட்னா
மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபேவின் வாகனத்தைச் சோதனை இடாததற்காக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்த சட்டத்தின்படி அனைத்து போக்குவரத்துக் குற்றங்களுக்கும் 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் வாகன சோதனைகளும் அனைத்து நகரிலும் மிகவும் தீவிரமாக நடத்தப்படுகிறது. அத்துடன் கருமை நிற ஜன்னல் கண்ணாடிகள் வாகனங்களில் பொருத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று பாட்னா நகரில் மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபேவுக்கு சொந்தமான வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அந்த வாகனத்தை அவர் மகன் அர்ஜித் சவுபே ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வாகனத்தில் அமைச்சரின் குடும்பத்தினர் சென்றுக் கொண்டு இருந்துள்ளனர். விதிமுறைகளுக்கு எதிராக அந்த வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் கருமை நிறத்தில் அமைந்திருந்தன.
பீகார் நகரில் உள்ள பைலி சாலையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் அருகே நகரப் போக்குவரத்துக் காவல் ஆணையர் ஆனந்த் கிஷோர் மற்றும் சூப்பிரண்ட் அமரகேஷ் ஆகியோர் இந்த வாகன சோதனையைப் பார்வை இட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அமைச்சரின் வாகனம் அங்குச் சென்றது. அதை எந்தக் காவலரும் சோதனை செய்யாமல் இருந்துள்ளனர்.
இதையொட்டி காவல்துறை ஆணையர் ஆனந்த் கிஷோர் மத்திய அமைச்சர் வாகனத்தைச் சோதனை இடாத மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். துணை ஆய்வாளர் தேவ்பால் பாஸ்வான், கான்ஸ்டேபிள்கள் திலிப் சந்திர சிங் மற்றும் பப்பு குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.