சென்னை: தமிழ்நாட்டில் கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. முறையான கள மேற்பார்வையுடன் பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் வளங்களை கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடத்தை கற்பதற்கு நடத்தப்பட்ட திறன் பயிற்சி மூலம் 40 சதவீதம் பேர் கற்றல் அடைவை பெற்றுள்ளனர் எனவும், 2 ஆம் கட்டமாக மற்றவர்களுக்கும் கற்றல் அடைவு தீவிரமாக பிப்ரவரி மாதம் வரையில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
”தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அடிப்படை கற்றல் விளைவுகளை (Basic Learning Outcome) 3 லட்சம் மாணவர்கள் (திறன் இயக்கத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களில் 40 சதவீதம்) அடைவதன் மூலம் தமிழ்நாடு அரசு தனது முதன்மைக் கற்றல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை இன்று எட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைக்கப்பட்ட மூன்று மாத தினசரி கற்பித்தல் செயல்பாட்டிற்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த 3 லட்சம் மாணவர்கள், மாநிலம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 90 நிமிட கால அளவு கொண்ட திறன் பாடத்திட்டங்கள், மையப்படுத்தப்பட்ட ஆசிரியர் தலைமை யிலான பயிற்சி மற்றும் கட்டமைக்கப்பட்ட கல்விக் கண்காணிப்பு ஆகியவற்றின் செயல்திறனை நிரூபித்து, அடிப்படை கற்றல் இடைவெளிகளிலிருந்து அவர்களின் வகுப்பு நிலையினை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துள்ளனர்.
கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் இன்னும் எதிர்பார்த்த அடிப்படை கற்றல் விளைவுகளை எட்டவில்லை என்பதை உணர்ந்து, கற்றல் செயல்பாடுகள் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய, அரசு இரண்டாம் கட்டத்தில் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இரண்டாம் கட்டத்தில் அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி 2026 வரை செயல்படுத்தப்பட உள்ளது. கற்றல் விளைவுகளை மாணவர்கள் அடையும் பொருட்டு பின்வருவனவற்றை செயல்படுத்த பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
டிசம்பர் 2025 வரை தினம் ஒரு பாடத்திற்கு 90 நிமிடங்கள் என அடிப்படை கற்றல் விளைவு வகுப்புகளை தொடர வேண்டும். டிசம்பர் மாத மாதாந்திர மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில், அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்களை வகுப்பு நிலை கற்றல் பகுதிக்கு மாற்ற வேண்டும்.
பிப்ரவரி 2026 இல் விரிவான கடை நிலை (Endline) மதிப்பீட்டிற்குத் தயார் படுத்தவேண்டும். திட்டத்தின் இறுதியில் 75 சதவீதம் மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவினை அடைதல் என்கிற இலக்கினை அடைதல்.
வலுப்படுத்தப்பட்ட இரண்டாம் பகுதி அனைத்துத் திறன் மாணவர்களுக்கும் தொடர்ச்சியான, கட்டமைக்கப்பட்ட மற்றும் தெளிவான முன்னேற்ற பாதையை உறுதி செய்கிறது.
இரண்டாம் கட்ட செயல்பாட்டின் தினசரி கண்காணிப்பை மேற்பார்வையிடுதல். வகுப்பு நிலை பகுதிகளுக்கு மாணவர்கள் சரியான நேரத்தில் மாறுவதை உறுதி செய்தல். தொடர்ச்சியான கல்வி சார்ந்த மீளாய்வு கூட்டங்கள் நடத்தி தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
முறையான கள மேற்பார்வையுடன் பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் வளங்களை கொண்டு உதவுதல். மாவட்ட அளவிலான செயல்திறனை கண்காணித்து சீரான முன்னேற்றத்தை உறுதி செய்தல். இந்த முயற்சிகள் மாணவர்கள் அடிப்படை திறன்களை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், தர நிலை திறனை நோக்கி முன்னேறுவதையும் உறுதி செய்கின்றன.
அடிப்படை கற்றல் விளைவில் உள்ள இடைவெளிகளை களைவது முதன்மையான பணி என்பதை தமிழ் நாடு அரசு உறுதிப்படுத்துகிறது. மேலும், எந்த மாணவர்களும் கல்வியில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதாக திறன் இயக்கம் செயல்படுகிறது. நிலையான கண்காணிப்பு, இலக்கு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் சார்ந்த முன்னெடுப்புகள் மூலம், தமிழ்நாடு முழுவதும் கற்றல் விளைவுகளில் அளவிடக்கூடிய மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கு அரசு உறுதிபூண்டுள்ளது”