புதுடெல்லி: சிறார் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு), கடத்தல் தடுப்பு மற்றும் சிறார் பாதுகாப்பு(பாலியல் குற்றத்திலிருந்து – போக்ஸோ) போன்றவை தொடர்பான 3 முக்கிய சட்டங்கள், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாக்கள் கடந்த மக்களவையிலேயே அறிமுகம் செய்யப்பட்டவைதான் என்றாலும், பல்வேறு காரணங்களால் தாமதமாகி, தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
கடத்தல் தடுப்பு மசோதாவானது கடந்தமுறை மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில், அந்த மசோதாவின் சில அம்சங்களை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள், முதலில் அந்த மசோதாவை நாடாளுமன்ற கமிட்டிக்கு அனுப்பவும் பரிந்துரை செய்தன.
கடந்தாண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், சிறார் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. இந்த திருத்தத்தின்படி, தத்தெடுத்தல் தொடர்பான உத்தரவுகளை மாவட்ட நீதிபதியே வழங்க முடியும். ஆனால், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
போக்ஸோ சட்டத் திருத்தத்தின்படி, குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்வோருக்கு மரண தண்டனைப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில், குழந்தை ஆபாச படம் வைத்திருப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர்பான சர்ச்சை எழுந்தது.