கோடா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள லால்மதியா நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்காளத்தில் உள்ள ஃபராக்கா அனல் மின் நிலையத்துடன் இணைக்கும் ரயில் பாதை மெர்ரி-கோ-ரவுண்ட்.  இந்த ரயில் பாதை  NTPC ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பாதையில் இன்று(ஏப்ரல்.01) அதிகாலை 3  மணியளிவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது.

 

இந்த விபத்தில் 2 லோகோ பைலட் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மேலும் நான்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள் காயமடைந்தனர் என்று அங்குள்ள காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தின்போது நிலக்கரி நிரப்பப்பட்ட பெட்டிகளில்  தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உள்ளூர் தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.  இச்சம்பவம் குறித்து NTPC வெளியிட்டுள்ள அறிக்கையில், மெர்ரி-கோ-ரவுண்ட் பாதை, கார்ப்பரேஷனுக்கு மட்டுமே சொந்தமானது என்றும், அது இந்திய ரயில்வேயின் வரம்பிற்குள் வராது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்  “லோகோ பைலட் தியானேஷ்வர் மால் (35) மற்றும் அம்புஜ் மஹதோ (35) ஆகியோர் உயிரிழந்தனர் உதவி லோகோ பைலட் ஜி.கே. நாத் மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோருடன் ரவி கோஷ் மற்றும் ஜிருல் ஷேக்கரே உள்ளிட்ட இரண்டு தொழிலாளர்களும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மால்டாவிற்கு அனுப்பவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.  விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சிதறுண்டு கிடக்கும் ரயில் பாகங்களை 140 டன் எடையுள்ள கிரேன் அகற்றி வருகிறது.