திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில், 3 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு, ரேமா தேவி என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் 4 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை. அப்போது, அந்தக் குழந்தைகள் ஊடகங்களில் பெரிய செய்தியாகின.
உத்ரம் நட்சத்திரத்தன்று அக்குழந்தைகள் பிறந்ததால், நான்கு பெண்களுக்கும் உத்ரா, உத்ரஜா, உத்தரா மற்றும் உத்தமா என்றும், மகனுக்கு உத்ராஜன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
அவர்களின் முதல் பிறந்த நாள் மற்றும் அவர்கள் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் உள்ளிட்ட அவர்கள் தொடர்பான பல நிகழ்வுகள் செய்திகளாகின. இந்நிலையில், அவர்களுக்கு 10 வயதாக இருந்தபோது, அவர்களின் தந்தை பிரேம் குமார் இறந்துவிட்டார்.
இந்நிலையில், பரிதவித்த இதய நோயாளியான தாய் ரேமா தேவிக்கு, வங்கியில் வேலை வாய்ப்பை அளித்தது மாநில அரசு. கடும் சிரமங்களுக்கிடையே தனது 5 குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினார் ரேமா தேவி.
இந்நிலையில், 4 பெண்களில் மூவருக்கு அக்டோபர் 24ம் தேதி திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. மகனுக்கான பெண், கொரோனா காரணமாக அமீரகத்தில் சிக்கிக் கொண்டதால், அவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.