தென் மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது.
தனது சொந்த தொகுதியான அமேதியில் அவர் நிற்பதை கட்சி மேலிடம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ மாக அறிவித்து விட்டது.
தென் மாநிலத்தையும், வடமாநிலத்தையும் இணைக்கும் வகையில் அவர் தெற்கு பகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
டுவிட்டரில் மட்டுமே ராகுல் அழைக்கப்பட்ட நிலையில்- கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ராகுலுக்கு கடிதம் எழுதி முறையான அழைப்பு விடுத்துள்ளார்.
‘’கர்நாடகத்தில் நீங்கள் போட்டியிட்டால் தென் பகுதி காங்கிரஸ் வளர்ச்சிக்கு மேலும் துணையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ராகுலுக்கு பெங்களூரு மத்தி, பிதார் மற்றும் மைசூரு ஆகிய மூன்று தொகுதிகள் ‘ரிசர்வ்’ செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி ,சிவகங்கை ஆகிய தொகுதிகளும், கேரளாவில் வயநாடு தொகுதி யும் ராகுலுக்காக – இருப்பில் வைக்கப்படுள்ளன.
அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ‘அமேதியில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்’’ என்று அறிவித்திருந்தாலும்- கடைசி நேரத்தில் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என தெரிகிறது.
எனவே தென் மாநிலத்திலும் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்- ராகுல்.
தமிழ்நாட்டில் – தி.மு.க.வை நம்பியே களம் இறங்க வேண்டும்.அதனை ராகுல் விரும்பவில்லை.
தேசிய அளவில் இடதுசாரிகளுடன் உறவு வைத்துள்ள நிலையில்,அங்கே ஆட்சி செய்யும் கேரளாவில் போட்டியிடவும் அவர் தயாராக இல்லை.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் கர்நாடகமே ராகுல் –தேர்வாக உள்ளது.
இரு தினங்களில் அவர் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
–பாப்பாங்குளம் பாரதி