மும்பை
ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட மூன்று டிவி சேனல்கள் தங்கள் டிஆர் பி ரேட்டை அதிகமாகக் காட்ட லஞ்சம் அளித்ததாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
டி ஆர் பி என்பது டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என்பதன் சுருக்கமாகும். இது ஒவ்வொரு டிவி சேனலையும் எத்தனை பேர் எத்தனை நேரம் பார்க்கிறார்கள் என்னும் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் மக்களிடையே அதிகம் புகழ் பெற்ற மற்றும் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் எவை என கண்டறியப்படுகிறது.
இது குறித்த தகவல்களை அளிக்கும் ஹன்சா என்னும் நிறுவனம் அர்னாப் கோஸ்வாமியின் தலைமையில் இயங்கும் ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய மராத்தி சேனல்களின் டிஆர்பியை அதிகரிக்க வேலை செய்து வருவதாக மும்பை காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. இந்த மூன்று சேனல்கள் குறித்தும் மும்பை காவல்துறை விசாரணை செய்துள்ளது.
அதில் மும்பையில் 2000 பாரோமீட்டர் கருவிகளை இந்த நிறுவனம் மும்பை வீடுகளில் பொருத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் இந்த சேனல்கள் சார்பாக வீடுகளுக்குச் சென்று தங்கள் சேனல்களை அதிக நேரம் பார்க்கப் பணம் லஞ்சமாக அளித்துள்ளனர்.
இந்த பணத்தை பெற்றுள்ளவர்கள் தொடர்ந்து இந்த சேனல்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் ரூ.400 முதல் ரு. 500 வரை அளித்துள்ளதை பணம் வாங்கிய வீட்டார் ஒத்துக் கொண்டுள்ளனர். இதையொட்டி மராத்தி சேனல்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிபப்ளிக் டிவி இயக்குநர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்ப உள்ளது.