புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.வை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு பாஜகவின் பலம் 9 ஆக அதகரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதனால், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றதால், என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. .மாநில முதல்வராக என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி கடந்த 7ம் தேதி பதவியேற்றார். என்.ஆர்.ரங்கசாமி அமைச்சரவையில், பாஜக இடம்பெறும் என கூறப்பட்டது. துணைமுதல்வர் பதவி கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அமைச்சர்கள் நியமிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்ந சூழ்நிலையில், என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பா.ஜ.,வை சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில், தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், பா.ஜ., நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் தம்பியும் பா.ஜ. பிரமுகருமான ராமலிங்கம் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கோவிந்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. என்.ஆர்.காங்., கட்சியை விட ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே குறைவாக உள்ளது. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது.
தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்.,- பா.ஜ.,- அ.தி.மு.க.,கூட்டணி அமைத்ததால், நியமன எம்.எல்.ஏ.,க்களை தலா ஒரு சீட் வீதத்தில் 3 கட்சிகளும் பிரித்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாஜக தலைமையோ, கூட்டணி கட்சிகளை மதிக்காமல், பாஜகவை சேர்ந்தவர்களே 3 நியமன எம்எல்ஏக்களாக நியமனம் செய்துள்ளது. இது கூட்டணி கட்சிகளியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோதும், அப்போதைய கவர்னர் கிரண்பேடி, மாநில அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.