டில்லி,
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் முன்ஜாமீன் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.
இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு முன்ஜாமீன் வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு கூற இருப்பதாக டில்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையின்போது, தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது.
இந்த இரண்டு வழக்கும் டில்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னணியில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குகள் காரணமாக தங்களை கைது செய்துவிடுவார்களோ என எண்ணி, மாறன் சகோதரர்கள் டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த முன்ஜாமீன் மனுவானது கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 2ந்தேதி முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த போதும் தீர்ப்பு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இன்று (2-2-17) தீர்ப்பு அளிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.
முதலில் இன்று காலை காலை 10,30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணையின் போது மாலை 4 மணிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.