சென்ன‍ை: இந்தியாவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நாளை(பிப்ரவரி 13) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வலது முழங்கையில் ஏற்பட்ட வலி காரணமாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

சுழற்சி முறையில் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கடைபிடிப்பதால், ஆன்டர்ஸனுக்கும் சுழற்பந்துவீச்சாளர் டாம் பெஸ்ஸுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியிருப்பதாவது, “இந்தியாவுக்கு எதிராக நாளை(பிப்ரவரி 13) தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 4 பேருக்கும் பதிலாக ஸ்டூவர்ட் பிராட், பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஆன்டர்ஸன் தயாராக வேண்டும் என்பதால், அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பென் ஃபோக்ஸ் செயல்படுவார். கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக ஜானி பேர்ஸ்டோ அணியில் சேர்க்கப்படுவார்” என்று தெரிவித்தார்.