2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

india

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து வந்த விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3விக்கெட்டில் அம்பத்தி ராயுடு 18 ரன்களில் ஆட்டமிழக்க 4வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். ஆனால், இந்த வாய்ப்பை விஜய் சங்கரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 46 ரன்களில் விஜய் சங்கர் வெளியேற அடுத்து வந்த கேதர் ஜாதவும், தோனியும் வந்த வழியே திரும்பினர்.

kohli2ndODI

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து ஆடிய விராட் கோலி 43வது ஓவரில் தனது 40 வது சதத்தை நிறைவு செய்தார். அதையடுத்து கோலி 116 ரன்களிலும், ஜடேஜா 21 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களாமிறங்கினர். தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்திருந்தது. ஆரோன் பின்ச் 37 ரன்களில் ஆட்டமிழக்க, கவாஜா 38 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 12 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

698

அடுத்து இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்புடன் ஆடினார். அவர் 48 ரன்னில் ரன் அவுட்டானது ஆட்டத்தின் திருப்பு முனையானது. ஹேண்ட்ஸ்கோமுக்கு ஸ்டாய்னிஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் அரை சதமடித்து இறுதி வரை போராடி 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 242 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், பும்ரா, விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிக் கொண்டது. இது சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் 500வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.