டெல்லி:  திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி  மீதான ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு    டெல்லி உயர்நீதி மன்றத்தில்  இன்றுமுதல் விசாரணை நடைபெறுகிறது.

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  சிபிஐ தரப்பில், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையின காங்கிரஸ் ஆட்சியின்போது திமுக எம்.பி. ஆ.ராசா, தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது,  தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக வும்,  மத்திய அரசுக்கு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை சுட்டிக்காட்டியது.

அதனடிப்படையில் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2018ம் ஆண்டு சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட இழுபறிக்கு பின்பு இன்று முதல்  (மார்ச் 18) விசாரணை நடைபெறும்  என கடந்த விசாரணையின்போது நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி,  திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி  1.76 லட்சம் கோடி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் தொடர் விசாரணை நடத்தப்பட உள்ளது.