2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த (2017) டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் முன்பு இந்த மனுக்கள் நேற்று (மே 25) விசாரணைக்கு வந்தன. அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “2ஜி முறைகேட்டால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி வழக்கு என்பது தேசத்தின் அவமானம்” என்று கூறினார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்வதற்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று வலியுறுத்திய அவர், வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்தும் யுக்தி இது என்றும் குற்றம்சாட்டினார்.
அவரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிஐயின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கும் அமலாக்கத் துறை மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கும் நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.