டில்லி
இன்று 2 ஜி முறைகேடு மேல் முறையீட்டு வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்த மனு மீது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கடந்த 2008 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த ஆ ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
டில்லி சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இந்த நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று வழங்கிய தீர்ப்பில் ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கடந்த 2018 மார்ச் மாதம் மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன.
அடுத்த மாதம் 12 ஆம் தேதி முதல் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இவ்வழக்கை முன் கூட்டியே விசாரிக்கக் கோரிக்கை விடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மனுக்கள் அளித்தன. இம்மனுக்களை நீதிபதி பிரிஜேஷ் சேத்தி விசாரித்து வருகிறார்.
இந்த விசாரணையின் போது, ”நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் இவ்வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டது. ஆகவே நீதிபதி இன்று இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி அளிக்க உள்ளார்.