பெய்ரூட்

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பெய்ரூட் நகர் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் நடந்த குண்டு வெடிப்பு லெபனான் நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்தால் 100 பேருக்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 4000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அங்கிருந்து சுமார் 10 கிமீ தூரம் வரை இந்த பாதிப்பு இருந்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  பலரும் அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்துள்ளனர்.   ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.   இந்த குண்டு வெடிப்பால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏறப்பட்டுள்ளது.

சுமார் 7 வருடங்களுக்கு முன்பு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு சரக்கு கப்பல் தொழில்நுட்ப காரணங்களால் துறைமுகத்தை விட்டு நகர இயலாத நிலை ஏற்பட்டது.   கப்பல் உரிமையாளர்கள் இந்த கப்பலையும் அதில் உள்ள ஊழியர்களையும் கவனிக்காமல் விட்டு விட்டனர்.  சில மாதங்கள் கழித்து துறைமுக அதிகாரிகள் கப்பல் ஊழியர்களைக் கப்பலை விட்டு வெளியேறி வீடுகளுக்குச் செல்ல அனுமதி அளித்தன்ர்.

கப்பல் உரிமையாளர் தர வேண்டிய பணத்துக்காக பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த கப்பலில் சுமார் 2700 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் என்னும் பயங்கர வெடி பொருள் இருந்தது.  இந்த வெடிபொருள் கப்பலில் இருந்து அகற்றப்பட்டு துறைமுகத்தில் இருந்த கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டன.

கப்பல் உரிமையாளர்களுக்கும்  துறைமுக நிர்வாகத்துக்கும் இடையே சட்டப்போர் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில் அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்துள்ளது.   தற்போது இந்த குண்டு வெடிப்பினால்  பெய்ரூட் நகரின் பல பகுதிகள் தரை மட்டமாகி உள்ளது.