டில்லி

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் நீதிபதிகள் உள்பட 262 முக்கிய பிரமுகர்கள்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

14 முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 262 பேர் கையொப்பமிட்டவர்களுடன், தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த பேச்சு சாதாரண இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  அதனால், சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மனதை புண்படுத்தியுள்ளதாகவும் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் அரசு மற்றும் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்டாலினின் கருத்துக்கள் மத நல்லிணக்கத்தையும் மதவெறி வன்முறையையும் தூண்டும் என்றும் அந்தக் கடிதம் கவலை தெரிவித்துள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து தமிழக  காவல்துறை, மற்றும் தமிழக அரசு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் இருக்கும் என்பதால் அரசின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கடிதத்தின் நகல்:

Letter_to_CJI – Sanadhan-01 Letter_to_CJI – Sanadhan-02

உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ள கடிதத்தில்,  ஓய்வுபெற்ற நீதிபதிகள்: பதி கே.ஸ்ரீதர் ராவ், தெலுங்கானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி; நீதிபதி எஸ்.எம்.சோனி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் குஜராத்தின் லோக்ஆயுக்தா; நீதிபதி எஸ்.என்.திங்ரா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி ஆர்.கே.மெராத்தியா, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி ஆர்.எஸ்.ரத்தோர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி எம்.சி.கார்க், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி டி.கே.அரோரா, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி பிரத்யுஷ் குமார், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி; நீதிபதி எஸ்.என்.ஸ்ரீவஸ்தவ், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி; நீதிபதி கரம் சந்த் பூரி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி எஸ்.என்.அகர்வால், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி; நீதிபதி டி.கே.பாலிவால், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி; நீதிபதி லோக்பால் சிங், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி; மற்றும் நீதிபதி நரேந்தர் குமார் ஜெயின், சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

மற்ற கையொப்பமிட்டவர்களில் 130 முன்னாள் அதிகாரத்துவத்தினர் (20 தூதர்கள் உட்பட) மற்றும் 118 ஆயுதப்படை அதிகாரிகள் அடங்குவர்.