பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக் கணக்காளர் (CA). அன்னா செபாஸ்டியன் பேராயில், மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் உள்ள உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனங்களுள் ஒன்றான எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் எக்சிகியூடிவாக 2024 மார்ச் முதல் வேலை செய்து வந்தார்.

2023ம் ஆண்டு CA படைப்பை முடித்த அன்னா பேராயிலுக்கு இது முதல் வேலை என்பதால் தனது வேலைகளை தவறாமல் செய்துவந்துள்ளார்.

அதிகம் உழைப்பவர்களை பெருமைப்படுத்தி அவர்களை கசக்கிப் பிழிந்து அந்த நிறுவனம் வேலை வாங்கி வந்துள்ளது.

நிறுவனம் தன்னை பெருமைப்படுத்துவதை எண்ணி மேலதிகாரிகள் சொன்ன வேலைகளை தனது பணி நேரம் முடிந்த பின்னும் தட்டாமல் செய்து வந்த அன்னா பேராயில் ஒருகட்டத்தில் வேலை அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

வேறு மொழி, வேறு இடம், முதல் வேலை, மேலதிகாரிகளுக்கு கீழ் படிதல் ஆகிய காரணங்களால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட அன்னா பேராயில் வேலைக்கு சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே கவலை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்.

அதே நேரத்தில், அவருடன் வேலை செய்த சிலர் வேலையை விட்டு சென்றதை அடுத்து இந்த வேலையை விட்டு போகாமல் நமது வேலை கலாச்சாரம் குறித்த மற்றவர்களின் அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும் என்று அன்னா பேராயிலை அவரது மேலதிகாரிகள் மூளைச்சலவை செய்துள்ளனர்.

இவர்களது பேச்சில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள முடியாத அந்த இளம் பெண் அவர்கள் கூறியதற்காக இரவு பகல் பாராமல் வேலை பார்த்த நிலையில் வேலை சுமை காரணமாக கடந்த ஜூலை 20ம் தேதி மரணமடைந்தார்.

வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்த தனது மகளின் இறுதி நிகழ்ச்சியில் கூட அந்நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அவருடன் பணிபுரிந்தவர்களோ கலந்து கொள்ளாத நிலையில் அவரது குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்தனர்.

இதையடுத்து அவரது இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் EY நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்ட அன்னா-வின் தாயார் அகஸ்டினா-வுக்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து EY நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ள அகஸ்டினா, “மதிப்புகள் மற்றும் மனித உரிமைகள் பற்றி பேசும் ஒரு நிறுவனம் அந்நிறுவனத்தில் வேலை செய்த ஊழியருக்கு தரும் மரியாதை மிகவும் கீழ்த்தரமாக உள்ளது.

வேலை அழுத்தம் காரணமாக எனது மகள் இறந்தது போல் இனி யாரும் சாகக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து கூறியுள்ள அவர், தனது மகளின் மரணத்துக்கு ஒரு வாரம் முன் மருத்துவரை சந்தித்த நிலையில் அவர் கவலை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சில மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.

தவிர, பல நேரங்களில் அவர் வீட்டுக்கு திரும்பிய பின்னும் அவருக்கு போன் மூலம் பல்வேறு பணிகளை வழங்கி வந்த மேலதிகாரிகள் காலையில் அந்த வேலையை முடித்து தரவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் சில நாட்களில் இரவு முழுவதும் அவர் கண்விழித்து வேலை செய்திருக்கிறார் ஆனால் வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களிலேயே பணிச் சுமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று EY நிறுவனம் மீது அந்நிறுவனத்தின் வேலை கலாச்சாரத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.