வுகான்

கொரோனா வைரசால் 259 பேர் மரணம்  அடைந்துள்ளதாகவும் வுகான் நகரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகையே உலுக்கி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது.  வெகு விரைவில் அந்த வைரஸ் சீனா முழுவதும் பரவத் தொடங்கியது.  இதையொட்டி சீனாவின் பல நகரங்களில் பயணத்தடை விதிக்கப்பட்டது.   இந்த வைரஸ் வேறு சில நாடுகளிலும் பரவத் தொடங்கியதால் உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள், “வுகான் நகரம் அமைந்துள்ள ஹுபெய் மாநிலத்தில் நேற்று வரை 1347 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  இத்துடன் மொத்தம் இந்த பகுதியில் 7153 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   சீனா முழுவதும்  2012 புதிய நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர்.   இவர்களில் 1795 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சீனா முழுவதும் மொத்தம் 259 பேர் கொரோனா வைரசால் மரணம் அடைந்துள்ளனர்.  மற்றும் 17988 பேர் பதிப்பு அடைந்துள்ளனர்    இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க சீன அரசு அறிவித்துள்ள புத்தாண்டு விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.   சுகாதார ஊழியர்கள்  முழு மூச்சுடன் தீவிர நிவாரணப்பணி களை செய்து வருகின்றனர்” என அறிவித்துள்ளனர்.

ஆயினும் சீன ஊடகங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் அதிக அளவில் இருக்காலாம் எனச் செய்திகள் வெளியிட்டுள்ளன.  வுகான் நகரில் மட்டும் சுமார் 75000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.   அத்துடன் அரசு அறிக்கையில் வுகான் பகுதியில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதை ஊடகங்கள் ஆமோதித்துள்ளன.