டெல்லி: மத்தியஅரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 25,593 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி (SC/ST/OBC) மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் ஐஐடி உள்பட பல்வேறு கல்நிறுவங்களை மத்தியஅரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் வகுப்புவாத சச்சரவுகளால், திறமையிருந்தும் பல எழை மாணவர்கள் மத்தியஅரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியை தொடர முடியாத நிலை தொடர்கிறது. இதுமட்டுமின்றி அவ்வப்போது மாணவர்களின் தற்கொலை போன்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில், மத்தியஅரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 25,593 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடியில்தான் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது.