புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் 25% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்பொருட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மத்திய அரசு, எல்ஐசி நிறுவனத்தின், 25% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பங்கு விற்பனை பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும். பங்கு விற்பனைக்காக, விரைவில் மத்திய அமைச்சரவையின் அனுமதி பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பங்கு விலக்கல் எப்போது என்பது சந்தையின் நிலவரத்தை பொறுத்து முடிவு செய்யப்படும்.
கொரோனா தாக்கத்தால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5% என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில், பங்கு விற்பனை உள்ளிட்டவற்றின் மூலம், ரூ.21 லட்சம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ரூ.5,700 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.