கன்னியாகுமரி: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் உள்பட 25 மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இது குமரி மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை உள்பட சில நாடுகளால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மாவட்ட மீனவர்களை இந்தோனேசிய கடற்படைகைது செய்தது. அதுபோல கடந்த 22-2-2022 அன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து தமிழக மீனவர்கள் 33 மீனவர்கள், 3 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், அவர்களை கடந்த 7ந்தேதி செஷல்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, செஷல்ஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் . இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இநத் நிலையில், தற்போது, 19 பேர் மற்றும் வடமாநில மீனவர்கள் 6 பேர் என மொத்தம் 25 பேரை செசல்ஸ் கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. கன்னியாக்குமரியின் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த நாயகம், அந்தோணி என்பவர்களது இரண்டு படகுகளையும் செஷல்ஸ் நாட்டு கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் இதுவரை 5 விசைப்படகுகளுடன் 33 தமிழக மீனவர்கள் மற்றும் 25 வடமாநில மீனவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.