உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும், தவிர, அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிரான வரியை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், வரி ‘வசூல் மன்னன்’ என்று இந்தியாவை குறிப்பிட்டுள்ளதுடன் அதிக வரி வசூலிக்கும் நாடுகளுக்கு எதிரான வர்த்தகப் போரை அறிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்படாத அனைத்து கார்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு வரிகள் இருக்காது” என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்ட (55 சதவீதம்) பொருட்களுக்கான வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது. இரு நாடுகளின் அரசாங்க வட்டாரங்களின்படி, இதன் மதிப்பு ₹1.96 லட்சம் கோடி ($23 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்படலாம். இது பரஸ்பர கட்டணங்களிலிருந்து நிவாரணம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய கட்டணக் குறைப்பாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.