இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேற துடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதற்காக பல லட்சம் செலவு செய்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவவும் சிலர் தயங்குவதில்லை.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் தேர்ந்த ஏஜெண்டுகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவும் எண்ணத்தில் இந்தியாவில் இருந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் இதுபோன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதை பயிற்சி மையங்கள் கொண்டு தொழில்முறையாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், உ.பி. மாநிலம் லக்னோ நகரைச் சேர்ந்த குரு சேவக் என்ற 24 வயது இளைஞர் மற்றும் அவரது மனைவி ஹர்ஜித் கவுர் இருவரும் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்த குரு சேவக் 67 வயதான நபர் போல வேடமணிந்து கனடா செல்ல முயன்ற நிலையில் சந்தேகத்தின் பெயரில் அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததை அடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில், ஜக்கி என்று அழைக்கப்படும் ஜகஜீத் சிங் எனும் ஏஜென்ட் மூலம் இவர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற சென்றது தெரியவந்தது.
குரு சேவக் மற்றும் ஹர்ஜித் கவுர் இருவரையும் அமெரிக்கா கொண்டு சேர்க்க 60 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும் முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்தை பெற்றுக்கொண்டு 67 வயதுடைய ரஷ்விந்தர் சிங் சஹோடா என்ற பெயரில் ஒரு பாஸ்போர்ட்டும் அதேபோல் வயதான ஒரு பெண்ணின் பெயரில் மற்றொரு பாஸ்போர்ட்டை தனது மனைவிக்காக ஜக்கி வழங்கியதாக குரு சேவக் கூறியுள்ளார்.
மேலும், டெல்லி மஹிபால்புர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்ட இவர்களுக்கு திலக் நகர் பகுதியில் உள்ள ஒரு சலூனில் வயதானவர் போன்ற தோற்றமளிக்கும் வகையில் முடியை வெள்ளையாக மாற்றி மேக்கப் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து உத்தரகாண்ட மாநிலம் ருதராப்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜக்கி-யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தவிர, திலக் நகரில் உள்ள சலூன் உரிமையாளரையும் கைது செய்துள்ள போலீசார் அவரை முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர்.
லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்று சிக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக குரு சேவக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.