டில்லி:

நாட்டின் பல பகுதிகளில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதியதாக 24 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே கடந்த 1ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது நிதிநிலை அறிக்கையில், மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டும் இல்லாமல் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவ தாகவும்,  கிராமபுற சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்தும்  ரூ16,713 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடு முழுவதும் 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கும் வகையில், சுமார் 14 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி தலைமை யிலான  மத்திய  அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கிராமப்புறங்களில் பிரசவ தாதி பயிற்சி மையங்களும், 248 செவிலியர் பயிற்சி மையங்களும், அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுகாதாரம் குறைவாக உள்ள  பகுதிகளில் 24 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது உறுதி யாகிறது. இதன் காரணமாக  கூடுதலாக 10 ஆயிரம் இளநிலைப் படிப்புக்கான இடங்களும், முதுநிலை படிப்பில் 8058 இடக்ளும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 2020-21ம் ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.