delhi Restaurant
டெல்லி-
தலைநகர் டெல்லியில் உள்ள ஹோட்டல்களில் இயங்கும் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகள் இனி 24 மணி நேரமும் விடியவிடியத் திறந்திருக்கும். அதற்கான  கலால் துறையின் புதிய கொள்கை முடிவினை டெல்லி மாநில அரசு கொண்டு வரவுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கலால் துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 மணி நேர உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கான கலால் வரியை 60 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 7 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளில் செயல்படும் உணவகங்கள், மதுபான விடுதிகள், மோட்டல்கள் ஆகியவற்றை 24 மணி நேரமும் இயக்குவதற்கு ஊக்குவிக்கும் விதமாக இந்தப் புதிய கலால் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
டெல்லியின் பஹர்கஞ்ச், ஷாக்பூர் ஜாட் மற்றும் சாந்தினி சவுக் ஆகிய இடங்களில்  உள்ள ஐந்து நட்சத்திர  மற்றும் ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவை இனி விடிய விடிய திறந்திருக்கும்.உணவகம் மற்றும் மதுபான விடுதிகள் கொண்ட 5 நட்சத்திரம் மற்றும் அதற்குமேல் அதிக நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகள் டெல்லியில் 150 உள்ளன எனவும், 300 முதல் 350 வரை மோட்டல்கள் உள்ளன எனவும் அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.  5 நட்சத்திர அந்தஸ்துக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்துக் கொள்வதற்கான ஆண்டு உரிமத் தொகையாக முன்னர் ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை அதிகம் என்பதால் அது பெரும் வரவேற்பினைப் பெறவில்லை. இதுபோன்ற விடுதிகளுக்கு இரவு முழுவதும் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் சில ஹோட்டல்கள் 24 மணி நேரம் திறந்து வைப்பதற்கான உரிமம் பெற்றுள்ளனவா என்பதை கண்டறியமுடியவில்லை.  உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை மூடுவதற்கான நேரம் இரவு 1 மணி ஆகும். இந்த நேரத்தை இன்னும் 4 மணி நேரம் கூடுதலாக திறந்து வைக்க அனுமதிகோரி ஆயத்தீர்வைத் துறையை ஹோட்டல் உரிமையாளர்கள் அணுகியபோது காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.  4 மணி  நேர கால நீட்டிப்புக்குப் பதிலாக  24 மணி நேரமும் ஹோட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகளை திறந்து கொள்ள அனுமதிப்பது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வசதியாக இருக்கும் என ஆயத்தீர்வைத் துறை முடிவுக்கு வந்துள்ளது. ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்களை 24 மணிநேரமும் திறந்து வைப்பதற்கான  ஆண்டு உரிமக் கட்டணமாக தற்போது 7 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ரூ.40 லட்சம், 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ரூ.30 லட்சம், டீலக்ஸ் ஹோட்டல்களுக்கு ரூ.20 லட்சம் என வசூலிக்கப்படுகிறது. ஆனால்  தற்போது அமல்படுத்தப்பட உள்ள புதிய கலால் கொள்கையின்படி, 75 இருக்கைகளுக்கும் குறைவாகக் கொண்ட 7 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ரூ.12.60 லட்சமும், 75 இருக்கைகளுக்கும் அதிகமாகக் கொண்ட 7 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ரூ.16.80 லட்சமும் ஆண்டு உரிமத்தொகையாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
இதேபோல், ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஹோட்டல்களில் உணவகங்கள் மற்றும் பார்களின், 24 மணி நேர மதுபான உரிம ஆண்டுக் கட்டணமாக 75க்கும் குறைவான  இருக்கைகள் கொண்ட ஹோட்டல்களுக்கு ரூ 10.50 லட்சம் மற்றும் 75  அதிகமான இருக்கைகள் கொண்ட ஹோட்டல்களுக்கு ரூ 13.70 லட்சமும்  நிர்ணயிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு விதிகளை தளர்வு செய்யம்வும் டெல்லி கலால்துறை திட்டமிட்டுள்ளது. உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா உரிமத்துடன் , மதுபான உரிமமும் உடனடியாக வ்ழங்க வேண்டும் என டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சுற்றுலாத்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.