வேலூர்: புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.225.86 கோடியில் புதிய திட்டங்கள்ளை தொடங்கி வைத்த  முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல  சலுகைகளையும் அறிவித்தார்.

தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை சார்பில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார்.

இதில், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டுமான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 78 முகாம்களுக்கு ரூ.12.41 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், 18,890 குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இணைப்புடன் உபகரணங்கள் வழங்குதல், 58,747 பேருக்கு உயர்த்தப்பட்ட பணக்கொடை வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் ரூ.225.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும்,  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார்.

அப்போது, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்; கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்கள் விட்ட கண்ணீர் மறக்க முடியாது; நாம் அனைவரும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். இனத்தால் நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள் தமிழர்கள். இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல; நாங்கள் இருக்கிறோம்.  இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக நாம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1983-ல் இருந்து ஈழத்தில் இருந்து இங்கு வந்து கொண்டி ருக்கிறீர்கள். முகாம்களிலும் சிலர் வெளியிலும் தங்கியுள்ளீர்கள்.

1997-ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். கடந்த 10 ஆண்டு களாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக அரசு எந்த நலனையும் செய்யவில்லை. கவலைப்படவில்லை. தற்போது, திமுக அரசு பொறுப்பேற்ற தும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீங்கள் அகதிகள் இல்லை என்பதுடன் அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்காக 1997-ல் 3,594 புதிய வீடுகள் கட்டப்பட்டன. 1998-99இல் 3,816 வீடுகள் கட்டப்பட்டன. 2009-ல் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7,469 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. முதல் கட்டமாக 290 சதுரடி பரப்பளவுள்ள 3,510 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன.

இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்பட வில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில்முனை வோர்களுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கான நலத் திட்டங்கள் மேலும் தொடரும்.

இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். முகாம் வாழ் தமிழர்களுக்கு கோஆப் டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை உரை நிகழ்த்தினார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்கன் (அரக்கோணம்), டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், வில்வநாதன், தேவராஜ், நல்லதம்பி, ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.