சென்னை,
டாஸ்மாக் கடைகளை அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்டு.
சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 29ந்தேதி டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து போராடினர். அவர்களில் 21 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது, டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது குறித்து பொதுவான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அதில், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடை திறக்கக்கூடாது என்றும், திருமுல்லைவாயிலில் போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழ்நாட்டில் எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க்க வேண்டும் என்றும், மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்பது குறித்தும் 4 வாரத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.